search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு"

    பாகிஸ்தானின் லாகூரில் உள்ள சூபி மசூதி அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் போலீசார் உள்ளிட்ட 9 பேர் கொல்லப்பட்டனர். #PakistanBlast
    லாகூர்:

    பாகிஸ்தான் நாட்டின் 2-வது பெரிய நகரமான லாகூர் நகர் கிழக்கு பகுதியில் உலகப்புகழ் பெற்ற டேட்டா தர்பார் மசூதி அமைந்துள்ளது.

    இந்த மசூதியில் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் தொழுகை செய்வதற்கு வசதி உள்ளது. 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான இந்த மசூதியில் பெண்களும் தொழுகை நடத்துவதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

    ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் நோன்பு இருக்கும் காலம் நேற்று தொடங்கியது. இன்று அதிகாலை 2-வது நாளாக ரம்ஜான் நோன்பு தொழுகைகள் அந்த டேட்டா தர்பார் மசூதியில் நடந்தது.

    மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இருக்கும் அந்த மசூதி முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. ஆனால் அதையும் மீறி இன்று காலை 8.45 மணிக்கு அந்த மசூதி முன்பு 2-ம் எண் கேட் அருகே குண்டு வெடிப்பு நடந்தது.

    பயங்கர சத்தத்துடன் வெடித்த அந்த சக்திவாய்ந்த குண்டு வெடிப்பில் சிக்கி சம்பவ இடத்திலேயே 5 போலீஸ்காரர்கள் உள்பட 9 பேர் உடல் சிதறி பலியானார்கள். 25-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் 4 போலீஸ்காரர்கள் உள்பட 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

    குண்டு வெடிப்பு பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தீவிர விசாரணை நடத்தினார்கள். இதுபற்றி போலீஸ் டி.ஐ.ஜி. அஸ்பக் அகமதுகான் கூறுகையில், “பெண்கள் நுழைவு வாயில் பகுதியில் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. போலீஸ் வாகனங்களை குறி வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர்” என்றனர்.


    இதற்கிடையே குண்டு வெடிப்பை நடத்தியது தற்கொலை படையைச் சேர்ந்த மனித வெடிகுண்டு என்று தெரிய வந்துள்ளது. அவன் எந்த பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவன் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடந்த 2010-ம் ஆண்டு இந்த மசூதியில் தற்கொலை தாக்குதலை பயங்கரவாதிகள் நடத்தினார்கள். அப்போது 40 பேர் உயிரிழந்தனர்.

    இதையடுத்து அந்த மசூதியில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. ஆனால் பாதுகாப்பை மீறி பயங்கரவாதிகள் கைவரிசை காட்டி உள்ளனர்.

    தெற்கு ஆசிய நாடுகளில் உள்ள பழமையான சுபி வழிபாட்டு தலங்களில் இந்த வழிபாட்டு தலம் மிக மிக புகழ்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழிபாட்டு தலத்தை சீல் வைத்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    வழிபாட்டு தலத்தில் குண்டு வெடிப்பு நடத்தியதற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குண்டு வெடிப்பு பற்றி முழுமையான விசாரணை நடத்தி அறிக்கை தர அவர் உத்தரவிட்டுள்ளார்.

    ஆனால் இந்த குண்டு வெடிப்புக்கு இதுவரை எந்த பயங்கரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.
    பாகிஸ்தானில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், வன்முறை தாக்குதல்களில் 31 பேர் கொல்லப்பட்டுள்ளனர். #PakistanElections2018 #PakPollsViolence
    கராச்சி:

    பாகிஸ்தானில் பாராளுமன்றம் மற்றும் 4 மாகாண சட்டசபைகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. வாக்காளர்கள் எந்தவித அச்சமும் இன்றி வாக்களிக்க ஏதுவாக, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் போலீஸ் மற்றும் ராணுவ வீரர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர். வாக்குச்சாவடிக்கு வரும் அனைவரும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டனர். என்னும்  ஒரு சில பகுதிகளில் வன்முறை மற்றும் தாக்குதல் நடைபெற்றது தேர்தல் அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

    பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவில் வாக்குச்சாவடி அருகே போலீஸ் வாகனத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் 5 போலீஸ்காரர்கள் உள்பட 28 பேர் கொல்லப்பட்டனர்.



    கைபர் பாக்துன்க்வா மாகாணம் சிவாபி மாவட்டத்தில் வாக்குச்சாவடிக்கு வெளியே அவாமி நேசனல் கட்சி மற்றும் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹரீக் இ இன்சாப் கட்சி ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் இம்ரான் கான் கட்சி தொண்டர் ஒருவர் கொல்லப்பட்டார். 2 பேர் காயமடைந்தனர். மிர்புர்காஸ் வாக்குச்சாவடிக்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். லர்கானா பகுதியில் உள்ள அரசியல் கட்சி முகாமில் பட்டாசு வெடித்தபோது 4 பேர் காயமடைந்தனர்.

    தேர்தல் நாளான இன்று மதியம் வரை நடந்த வன்முறைத் தாக்குதல்களில் 31 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 36 பேர் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #PakistanElections2018 #PakPollsViolence
    ×